Saturday 23 July 2011

வெற்றி விநாயகன் வெண்பா அந்தாதி

காப்பு :-

தமிழால் துதித்தேன் தமிழால் அருளி
அமிழ்தாய் கவிதை அளி!

நூல் :-

வெற்றி வினாயகன் வீற்றருள் செய்கின்றான்!
சுற்றமும் நட்பும் தழைத்திடவே - அற்றம்
அகற்றி அருள்கின்ற ஐங்கரனை ஆனை
முகத்தனை எண்ணித் துதி!

துதித்துப் பணிந்தவர் துன்பம் களைவான்!
விதியையும் வெல்ல அருள்வான் - பதியாய்
கணநா தனையே கருத்தினில் வைத்து
கணமும் தவறாது போற்று!

போற்றிடும் பூதங்கள் போற்றிடு மெவ்வுயிரும்
வீற்றருளும் வீர கணபதியை! - காற்றாகி
காலமும் கோலமும் காட்டி யருள்வதால்
ஞாலம் அவன்றன் சரண்!

சரணெனக் கொண்டவர் சங்கடம் தீர்த்து
அரணெனக் காப்பான் அவரை - மரணமும்
ஐங்கரன் தொண்டரை அஞ்சும் நெருங்கிட!
தங்கத் தமிழினால் பாடு!

பாட்டும் படிப்பும் பயிலும் கலையாவும்
ஈட்டும் பொருளனைத்தும் ஈந்தருள்வான் - கூட்டமாய்
நாடித் துதிப்போர் நடுவினிலே நண்ணுதல்
கோடுடை ஐயன் குணம்!

குணமணி! கும்பிட்டோர் குற்றம் களையும்
கணமணி! கங்கை முடியோன் - கணபணம்
சூடும் விரிசடையன் மைந்தன் விநாயகன்
வாடும் உயிர்க்குத் துணை!

துணையாய் வருவான்! இணையாய் வருவான்!
கணையாய் களைவான் துயரை! - அணையா
விளக்காய் ஒளிர்வோம் விநாயகன் நோக்கால்
விளங்கித் துலங்கிடும் வாழ்வு!

வாழ்வின் பொருளை மனிதர் அறிந்திடார்
சூழ்வினையில் சிக்கி யுழன்றிடுவர் - வீழ்ந்த்து
கணபதி பாதத்தில் கண்ணீர் சொரிந்து
வணங்கிடின் வீழும் வினை!

வணங்குதல் ஒன்றையே வாழ்வின் பொருளாய்
இணங்கிச் சரண்புகுந்தேன் நின்னை - குணம்தந்து
குற்றங்கள் நீக்கி குறையெலாம் கொல்லவே
பற்றற்ற நன்னிலை தா!

தாயாய் நினைந்தூட்டித் தன்னடியார் முன்வருவான்!
வாயார வாழ்த்துவோர் வாழ்வினிலே - நோயாவும்
அணுகாது காக்கும் அருமருன் தாவான்!
அணுகி அவனை வணங்கு!

அணுகி அவனை வணங்குவோ ரெல்லாம்
நணுகிடார் நான்மறை யுண்மை - கண்ணுதலான்
மூத்த மகனை முழுவதும் நம்பிடின்
சீர்த்து விளைந்திடும் சீர்!

சீரான மூச்சளவு சீவனுக் குதவுதல்போல்
ஓரானை கன்றும் உதவிடும் - நேரான
புத்தியும் வித்தையும் சக்தியும் தந்திடும்
நித்தமும் செப்பிடு நீ!

நீள்துதிக்கை நீட்டியே ஔவையைத் தூக்கினாய்!
கோளண்டா கைலாயம் காட்டினாய்! - நளெலாம்
நின்னையே எண்ணி நினைந்திருப் போர்க்கெல்லாம்
இன்னமும் இன்னருள் ஈ!

ஈழத் தமிழர்கள் இற்று மடிவதைப்போல்
சூழும் துயர்கள் சுடப்படும் - வேழ
முகத்தோன் திருவருளால் முன்னின்று வீசும்
அகமும் புறமும் ஒளி!

ஒளியாண்டு நேரங்கள்  ஓயாக் கருணைக்
களிகொண்டு அருளும் கணனே! அளிவந்து
அணைவாய் அடியார் அழைக்கும் பொழுதே
இணைவாய் இதயம் கனிந்து!

 (தொடரும்...)